பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சடுகுடு ஆட்டம்


14. போராட்டம்: பாடுபவரோ அல்லது பிடிப்பவரோ ஒருவரை ஒருவர் தொடத் தொடங்குகிற பொழுதே போராட்டம் (Struggle) ஆரம்பித்து விடுகிறது.

15. பாடிச் செல்லும் முறை: பாடிச்செல்வோர் எதிர்க்குழுவினரின் பாட்டுடன் செல்வதையே ‘பாடிச்செல்லுதல் (Raid) என்கிறோம். எதிர்க் குழு பகுதிக்குச் சென்ற அவர், பாடிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு முறையாவது, பாடிச் செல்லும் கோட்டைக் கடந்துவிட்டு, பிறகு மூச்சுடன் தன் பகுதிக்கு வந்து சேர்வதையே ‘வெற்றிகரமாய்ப் பாடிச் செல்லுதல்’ என்கிறோம். பிடிப்பவர் அல்லது பிடிப்பவர்களைத் தொட்டுவிட்டால், அவர் பாடிச் செல்லும் கோட்டைக் கடந்து செல்ல வேண்டிய தேவையில்லை.

16. சன்மானக் கோடு (Bonus Line): சடுகுடு ஆட்டத்தின் சுறுசுறுப்பான ஆட்டத்திற்கும், விரைவான வேகத்திற்கும் ஆக்கப்பூர்வமான மாற்றாக சன்மானக் கோடு என்னும் புதிய விதி இப்பொழுது உருவாக்கப் பட்டிருக்கிறது.

இந்தக் கோடு பாடிச் செல்லும் தொடும் கோட்டிலிருந்து (Baulk Line) 1 மீட்டர் தூரத்தில் (கடைக் கோட்டை நோக்கி) குறிக்கப்படுகிறது. ஆடுகள இரு பக்கங்களிலும்தான். (படம் காண்க) சன்மானக் கோடு பற்றிய விதிமுறைகளை இனி காண்போம்.

1. எதிர்க்குழுவில் 5 பேர் அல்லது 5 பேர்களுக்கும் குறைவாக இருந்தால், சன்மானக் கோட்டின் விதியானது, நடைமுறைக்கு வராது. 5 பேர்களுக்கு மேலாக ஒரு குழுவில் எதிராட்டக்காரர்கள் இருக்கும்பொழுதுதான் இவ்விதியின் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.