பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

23


எல்லோரும் ஆடப்போகின்ற நேரத்தில்தான் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஆட்டத்தில் அசந்தர்ப்பவசமாக, ஒரு நல்ல ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டுவிட்டால், அந்தக் குழுவிற்கு அது பேரிழப்பாகவே போய்விடும். அதனால், இந்த ஆட்ட முறையை பலர் ஏற்றுக் கொள்ளாமல் போய்விட்டார்கள்.

ஆடாது ஒழிதலான காமினி ஆட்டத்திற்குரியனவாக அமைந்திருந்த விதிமுறைகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

1) இந்த ஆட்டத்தில் 3 முறை ஆட்டங்கள் (Innings) இருந்தன. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் 12 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

2) ஆடுவோரின் வயதுக்கேற்ப, போட்டி நடத்துபவர்கள் வசதிக்கேற்ப, ஆட்ட நேரத்தை 10–லிருந்து 12 நிமிடங்களாக மாற்றி அமைத்துக் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு தரப்பட்டிருந்தது.

3. தொடர்ந்து ஆடுதல் (Amar Game)

சாகாவரம் பெற்றவரை ‘அமரர்’ என்று அழைப்பது நமது மரபாகும். அது போலவே, ஒர் ஆட்டக்காரர் தொடப்பட்டோ அல்லது பிடிபட்டோ வெளியேற்றப் பட்டாலும், அவர் ஆடுகளத்தை விட்டு வெளியே வராமல், தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருப்பார். ஆனால், தொடப்பட்டதற்காக அல்லது பிடிபட்டதற்காக, எதிர்க்குழுவிற்கு 1 வெற்றி எண் கிடைக்கும்.