பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சடுகுடு ஆட்டம்


இந்த காலகட்டத்தில்தான், ஒலிம்பிக் பந்தயங்கள் ஜெர்மனி நாட்டிலே 1936 ஆம் ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அகில உலக நாடுகளும் சடுகுடு எனும் கபாடி ஆட்டத்தின் பெருமையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக, அமராவதி நகரைச் சேர்ந்த ‘ஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல்’ எனும் குழு, ஜெர்மனி நகரத்தில், மற்ற போட்டியாளர்கள், பல நாடுகளைச் சார்ந்த அதிகாரிகள் மத்தியிலே காட்சிப் போட்டி ஒன்றை நடத்திக் காட்டியது. வந்திருந்த பார்வையாளர்கள் ஆட்டத்தின் அடிப்படைத் திறன், நுணுக்கங்களை நுண்ணிதின் அறிந்து வியந்து, மனம் வியந்து பாராட்டினார்கள் என்றாலும், ஒலிம்பிக் பந்தயங்களில் ஒன்றாக இணைக்கப்படும் பாக்கியம் நம் நாட்டின் தலையாய ஆட்டத்திற்குக் கிடைக்காமல் போனது நம் துரதிர்ஷ்டமே!

என்றாலும், அதற்கான பயன் கிடைக்காமல் போகவில்லை. இந்திய ஒலிம்பிக் கழகம், சடுகுடு கபாடி ஆட்டத்தை ஒலிம்பிக் போட்டி விளையாட்டுக்களுள் ஒன்றாக, ஏற்றுக்கொண்டு இணைத்தது. அதனைத் தொடர்ந்து, 1938 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் விளையாட்டுகளுள் ஒன்றாக கபாடி ஆட்டத்திலும் போட்டிகள் நடைபெற்றன.

ஆட்டத்தின் வளர்ச்சி அற்புதமாக அமைந்த காரணத்தால், 1952 ஆம் ஆண்டு அகில இந்திய கபாடிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக திரு.எல்.கே. காட்போல் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.