உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

71


அளவிடற்கரிய ஆசையுடனே பங்கு பெறுகிறது. அந்த ஆசை எந்தவித ஆபத்து வராமலும், எக்காரணம் கொண்டும் அவப்பெயர் பெறாமலும் நிறைவேற வேண்டும் என்ற நினைவும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் கூடவே தொடர்ந்து வருவதும் உண்டு. அத்தகைய சிறப்பான நோக்கம் உள்ளவர்களே ஆட்டத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். பார்வையாளர்களிடையே புகழ்பெற்று விளங்கவும் முடியும்.

சடுகுடு ஆட்டம் இந்த நோக்கத்திற்கு இன்னும் நெருங்கிய தொடர்பு உடையதாக இருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. சடுகுடு ஆட்டம் இரண்டு குழு ஆட்டக்காரர்களிடையே உடல் தொடர்பு அதிகம் ஏற்படுத்துகின்ற ஆட்டமாகும்.

ஒருவரைப் பிடிக்கவும், மற்றவரைத் தொடவும் என்று உடலை வைத்து இலக்காகக் கொண்டே விளையாட்டு வளர்கிறது; தொடர்கிறது; முடிகிறது. அதனால், உடம்பில் கைபட்ட உடனே உணர்ச்சிப் பிழம்பாக மாறி விடுபவர்களும் உண்டு. உக்கிரத்துடன் அனல் பிழம்பாக ஆவேசம் கொண்டு அடிதடியில் இறங்கி விடுபவர்களும் உண்டு.

ஆத்திரம் அறிவை அடக்கி ஆட்சி செய்கிறபொழுது, அங்கே விதியும், நீதியும், நியாயமும் எடுபடாமல் போய்விடும். அந்த ஒரு சூழ்நிலை தோன்றாமல், விளையாட்டுப் பெருமகனாய் விதிகளுக்கடங்கி ஒழுகும் திருமகனாய் ஒவ்வொருவரும் திகழ வேண்டும்.

ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கு மாறாமல் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும் என்ற முதல் பாடத்தை முழுதும் உணர்ந்து ஒழுகிட வேண்டும் என்று