உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சடுகுடு ஆட்டம்


10. பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவரவருக்கென்று பல திறன்கள் இயல்பாகவே இருக்கும். எப்படித் தாக்கித் தப்பித்து வருவதென்று தந்திர முறைகள் தெரிந்திருக்கும். அப்படி பல திறமைகளை வைத்திருக்கின்ற பாடிச் செல்லும் ஆட்டக்காரர்கள், ஒருமுறை பாடிப் போகும்பொழுதே, தான் கற்ற ‘வித்தைகள்’ (Tricks) அனைத்தையும் எதிராளிகளிடம் காட்டிவிட்டு வந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தந்திர முறை என்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு விளையாடிவிட்டு வர வேண்டும். அல்லாவிடில், அவருடைய இயக்கம் இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துகொண்டு, வட்டம் போட்டு பிடித்துவிடுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு சூழ்நிலைக்கேற்ப தன் விளையாட்டுத் திறமையை, தொடும் ஆற்றலை வெளிக்காட்டிட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

11. பாடிச் செல்பவர் எந்தவிதமான தந்திர முறைகளைத் தொடுவதற்காகப் பயன்படுத்தினாலும், அதனை மின்னல் வேகத்தில், எதிராளிகள் எதிர்பார்க்காத நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும். ‘செத்தவன் கையில் வெற்றிலைப்பாக்கு’ என்பது போல, சோம்பேறித்தனமாக, சொகுசாக நின்று கொண்டு தொட முயற்சித்தால், பிடிபட்டு ஆட்டத்தைவிட்டு வெளியேற நேரிடும்.

12. பல தந்திர முறைகளை அடுத்தடுத்து செய்து, பிடிக்க வருபவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போல பாடிவிட்டு வர வேண்டும்.