டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
77
13. பாடிச் செல்பவர் எக்காரணத்தை முன்னிட்டும் பயந்துவிடக் கூடாது. பயந்த ஆட்டக்காரர் பாதி வழிகூட போக முடியாது. பாடித் தொடும் கோட்டை மிதிக்க முடியாமல், திரும்பி பயந்து வந்து ஆட்டமிழக்கின்ற ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, தந்திரமாக ஆடத் தெரிவதோடு, அஞ்சாமை நெஞ்சம் உள்ளவராகவும் செல்ல வேண்டும்.
அஞ்சா நெஞ்சம் என்றவுடன், ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல, துள்ளிக் குதித்து எல்லோருடைய பிடியிலும் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுவது அல்ல. இது புத்திசாலித்தனமான வீரத் தனமாகும். பயந்து பின்வாங்குவது கோழைத்தனம். அறிவுடன் அச்சமில்லாமல், பாதுகாப்பாக விளையாடி வருவதற்குத்தான் அஞ்சா நெஞ்சம் என்று கூறுகிறோம்.
எனவே, புத்திசாலித்தனமாக, பாடிச் செல்பவர் போய், சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது, சாதுர்யமாகத் தொட்டுவிட்டு, தன் பகுதிக்குப் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும்.
ஒருமுறை தான் பிடிபட்டால், தன் குழு ஒரு ஆட்டக்காரரை இழக்கிறது என்பது மட்டுமல்ல, எதிர்க்குழு ஒரு வெற்றி எண்ணையும், அதோடு மட்டுமல்லாமல், வெளியே நிற்கும் ஒரு ஆட்டக் காரரையும் உள்ளே வர வைத்து ஆடச் செய்யும் உரிமையையும் பெற்றுவிடுகிறது. தன் குழு குறைந்திட, ஒருவர் தவறு செய்வது, தன் குழுவுக்கு நன்மை செய்வதைவிட, தீமையையே அதிகம் செய்கிறோம் என்பதை உணர்ந்து பத்திரமாகப் பாடிச் சென்று, புத்திசாலித்தனமாக விளையாடிவிட்டு வர வேண்டும். அந்த அனுபவத்தை நீங்கள் நிறைய பெற வேண்டும்.