பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இந்தியப் பெருநாடு விடுதலை பெறுவதற்காகப் பாடுபட்ட சான்றோர்களிலே, தொண்டர்களிலே ஒருவனாக இருக்கும் பேற்றினை காலம் எனக்குத் தந்தது. ஆனால், பாரதம் சுதந்திரம் பெற்ற ஆகஸ்டு 15-ந்தேதியோடு விடுதலைப் போர் முடிந்துவிட்டதாக நினைப்பதற்கில்லை. அன்று, போர்முனை மாறியது; போர் முறை மாறியது. ஆனால் போர் தொடர்கின்றது. இது என் சித்தாந்தம். சுதந்திர இந்தியாவிலே மொழிவாரி தேசிய இனங்களின் தாயகமான மாநிலங்கள் முழு அளவு சுயாட்சி பெறும் போதுதான் சுதந்திரப் போர் முடிந்ததாகக் கருத முடியும். மாநில சுயாட்சிப் போராட்டம் பார்லிமெண்டரி முறைப்படி தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சட்டப் பேரவையிலும், சட்ட மேலவையிலும் மாநில சுயாட்சி பற்றி நான் நிகழ்த்திய முக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. 24.4.74-ல் டாக்டர் இராசமன்னார் குழுவின் பரிந்துரையையும், தமிழக அரசின் வெள்ளை அறிக்கையையும் சட்ட மேலவை முன்வைத்து, அங்கு மாநில சுயாட்சி கோரும் தீர்மானத்தையும் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் பற்றி தமிழரசுக் கழகம் கொண்டுள்ள கருத்தை விளக்கும் வகையில் 27.4.74ல் மேலவையில் யான் நிகழ்த்திய சொற்பொழிவு இந்நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது.