பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 69 தேவை என்று அவர்கள் திருத்தம் கொடுத்திருந்தால், அதை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், அவர்கள் அப்படித் தரவில்லை. எடுத்ததற்கெல்லாம் 'பிரிவினை' - 'பிரிவினை' என்று அலறுகிறார்கள். நான் மிகவும் வருத்தத்தோடும் உணர்ச்சியோடும் எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகின்றேன்; அதாவது, தமிழரசுக் கழகத்தாராகிய நாங்கள் தேசபக்தி இல்லாதவர்களல்ல என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன். 'தேசபக்தி' என்பது சிண்டிகேட் காங்கிரசின் சொந்தச் சொத்து அல்ல. 'தேசபக்தி' என்பது, நான் இங்கு வாயளவில் சொல்லிக் காட்டுவதன்று. 45 ஆண்டு காலமாக தேசபக்தனாக வாழ்ந்து காட்டி. அதன் பின்னர்தான் இந்தத் தீர்மானத்தை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். இந்தியாவின் மீது எனக்குள்ள பக்தியின் காரணமாகத் தான் இந்தத் தீர்மானத்தை இந்தப் பேரவையில் கொண்டு வந்திருக்கிறேன். 'காங்கிரஸ் தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்ளும் சில சுயநலக்காரர்கள் செய்யும் தவறினால் இந்தியாவின் எதிர்காலம் இருண்டு விடுமோ என்று பயந்துதான் - அதைத் தடுத்து நிறுத்தத்தான்-இந்தத் தீர்மானத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். எந்தத் தேசபக்தியோடு நான் விடுதலைப் போரின்போது சிறைச்சாலைக்குச் சென்றேனோ, அதே தேசபக்தியோடுதான் இந்தத் தீர்மானத்தை இங்கு முன்மொழிந்திருக்கிறேன். இந்தத் தீர்மானத்திலுள்ள மாநில சுயாட்சிக் கருத்துக்கூட, எனக்குச் சொந்தமானதன்று. காங்கிரசிடமிருந்து. காந்தியடி களிடமிருந்து. பண்டித ஜவகர்லால் நேருவிடமிருந்து கற்றுக் கொண்டதுதான்.