பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சதுரங்கம் விளையாடுவது எப்படி?



காட்டுகிறது. எளிய சக்தியால், வலிமை மிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்தி விடுகிறது” என்கிறார்.

கண்டதற்கெல்லாம் அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்தி, விரைந்து வரும் வெள்ளத்தைத் தடுத்து வாய்க்கால் வழியே வீடு, வயல்களுக்குப் பயன்படுமாறு செய்கிற தன்மை போலவே பொங்கி வரும் நினைவுகளை நிதானப் படுத்தி, நேரான முறையிலே, நிறைவு தரும் பயனுக்காகப் பயன்படுத்துகின்ற தன்மையிலேதான் சதுரங்க ஆட்டம் பயன்படுகிறது.

எதையாவது நினைத்துக் கொண்டு எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கின்ற மனம் கொண்ட மனிதரையும், சதுரங்க ஆட்டம் இதமான நினைவுகளுடன் அமர்ந்தாடச் செய்து விடுகிறது. அமைதி கொள்ளுமாறு வழி நடத்துகிறது என்று ஆடியவர்களின் அனுபவங்கள், நமக்குத் தெள்ளத் தெளியக் காட்டுகின்ற உண்மையாகும்.

வெறி கொண்டிருக்கும் மூளைக்கு, விளையாட்டுத் தனமான இன்பத்தை வாரி வாரி வழங்கும் சதுரங்க ஆட்டத்தின் பிறப்புக்குரிய சூழ்நிலைகளை விளக்கும் கதைகளை இனி காண்போம்.

நன்னெறி வழுவாமல் நீதி வழியாக நடந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையைக் காட்டுவதற்கென்று தோன்றிய கதைகள், சரித்திரச்