பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சதுரங்கம் விளையாடுவது எப்படி?



சிப்பாய்களுக்குப் பதிலாக அனுமாரையும் உருவகமாக அமைத்து ஆடினார்களாம்.

இவ்வாறு பல நூற்றாண்டுகளாக பலகோடி மக்களால் பெரிதும் விரும்பி ஆடப் பெற்ற ஆட்டத்திற்குரிய விதிகளை, ஏறத்தாழ 1800 ஆம் ஆண்டுக்குப் பிறகே ஒழுங்குபடுத்தி அமைத்தார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

மக்களை மயக்கும் சதுரங்கம்

மக்கள் சதுரங்க ஆட்டத்தை விரும்பியதற்கு அடிப்படை காரணங்கள் இருக்கத்தான் இருந்தன.

போட்டிமிகுந்த போராட்ட உணர்வு என்பது வாழ்க்கைக்குத் தேவை. அத்தகைய போட்டி மனப்பான்மையையும் போராட்ட குணத்தையும் வளர்த்து, அவற்றிற்கு நல்ல வடிகாலாக விளங்குகிறது சதுரங்க ஆட்டம்.

எதிர்பாராமல் இடைப்படுகின்ற தடைகளை, இடர்படுகின்ற துயர்களை, வழிமறிக்கின்ற வலிய சக்திகளையெல்லாம் எளிய முயற்சியுடனே சமாளித்து, வெற்றி பெறும்போது உண்டாகின்ற மகிழ்ச்சிக்கு அளவேது? அத்தகைய அளவில்லா ஆனந்தத்தை சதுரங்க ஆட்டத்தை ஆடும்போது ஆட்டக்காரர்கள் உணர்வதால்தான், மக்கள் இதனை மிகவும் விரும்பி ஆடுகின்றனர்.