பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

53



சிப்பாய் காய், கறுப்புக் காய்கள் இருக்கும் திசையை நோக்கித் தான் முன்னேறும். அதாவது நேராக இருக்கும் எதிர்க் கட்டத்திற்குத்தான் நகர்த்த வேண்டும்.

முதன் முதலாக சிப்பாய் காயை நகர்த்த விரும்புகின்றவர், தான் விரும்பினால் அல்லது தேவையானால் இரண்டு கட்டங்கள் முன் நோக்கி நகர்த்தலாம். அந்த சிப்பாய் காய், ஒரு முறை நகர்ந்த பிறகு, அடுத்து ஆட இருக்கும் ஆட்ட வாய்ப்புகளில், ஒரு முறைக்கு ஒரு கட்டம்தான் நகரவேண்டும். நகர்த்தப்பட வேண்டும். மீண்டும் இரண்டு கட்டம் தாண்ட முடியாது. அதுதான் விதி.

முன் கட்டத்திற்கு ஒரு முறை நகர்ந்து போய் விட்டால், எக்காரணம் கொண்டும் அது திரும்பி முன்னிருந்த இடத்திற்கு வரவே முடியாது. அதாவது, முன்னேறிய காய்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பின்னால் வரக்கூடாது. வரவே கூடாது.

ஒன்று, எதிரியின் காயை வெட்டுவதற்காக முன்னேறலாம். அல்லது வெட்டப்பட்டு வெளியேற்றப்படலாம். அல்லது அங்கேயே நின்று விடலாம்.

சிப்பாய் காய் எதிரியின் காயை வெட்ட நேரிடுகின்றபொழுது மட்டும் தனக்கு வலப் புறமாக அல்லது இடப்புறமாக உள்ள குறுக்குக் கட்டத்தில் ஒரு கட்டம் நகர்ந்து வெட்டித்தான் ஆடமுடியும்.