192சு. சமுத்திரம்
உஷா அவளிடம் பேசவில்லை. மோகினியை உற்று நோக்கினாள். மோகினியும் தன் கணவனின் தங்கையை அடையாளம் கண்டுகொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆனால் உஷா விடவில்லை. மாஜி அண்ணியைப் பார்த்ததில் ஏகப்பட்ட ஆத்திரம்.
“என்ன மிஸ், மோகினி, அடையார் வீடு எப்டி இருக்கு? என் சின்ன வயசில் பரீட்சை சமயத்துல டிஸ்டர்பன்ஸ் இல்லாம இருக்கறதுக்காக...நான் ஆசையோடு அங்கேதான் போய்ப் படிப்பேன். வீடு இப்ப எப்படி இருக்கு?”
மோகினியின் உதடுகள் துடித்தன. ஏதோ பேசப்போனாள். அவளால் கையை ஆட்டாமல் பேச முடியாது. ஆனால் பேசப்போன சமயத்தில், நமைச்சல் ஏற்பட்டதால், கையையும் ஆட்டமுடியவில்லை. பேசவும் முடியவில்லை.
“என்ன மிஸ் மோகினி! சௌக்கியமான்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்கிறீங்களே. நீங்க கேட்காவிட்டாலும் நான் சொல்றேன். சபாபதி இப்போ ஐ.பி.எஸ் ஆபீஸர். கமலாக்கா புருஷன் ஐ.ஏ.எஸ். ஒங்க கார்ப்பரேஷன்ல மானேஜிங் டைரெக்டரா வரப்போறாரு. இன்னொரு அண்ணன் சீனிவாசன்... நீங்க கேட்காதபோது நான் எதுக்கு சொல்லணும், உடம்புக்கு என்னபண்ணுது?”
காமாட்சிக்கு விஷயம் லேசாகப் புரிந்தது, மோகினிமீது கொஞ்சம் வெறுப்பும் ஏற்பட்டது.
உஷா மௌனமாக மோகினியின் கன்னத்தில் இருந்த கறுப்புத் திட்டுக்களைப் பார்த்தாள். பிறகு, ‘ஐ ஆம் ஸாரி, நான் டாக்டர் என்கிறத மறந்து சீனிவாசனின் சிஸ்டரா நடந்துக்கிட்டேன். பயப்படாதீங்க மிஸ் மோகினி. என் உணர்ச்சிய டிரீட்மெண்ட்ல காட்டமாட்டேன். சொல்லப்போனா சீனி காணாமப்போனதற்காக, உணர்ச்சிகளைக் கொட்டிக் கொட்டி, கடைசில உணர்ச்சியே இல்லாம போயிட்டேன். அந்த ரூமுக்குள்ள போறீங்களா, என்னன்னு பார்க்கலாம்! ப்ளீஸ்...’ என்றாள்.