உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200சு. சமுத்திரம்

பாதிப் பாவிகளைச் சந்திப்பதற்காக முழுப் பாவிகளாகிறார்கள். ஒரு சிலர், முழுப் பாவிகளால் முழு ஞானிகளாகிறார்கள். பாவமும், புண்ணியமும் சமுதாய கன பரிமாணத்தின் எடைக் கற்கள், தனி மனிதனின் காரண—காரியங்கள் அல்ல.”

சாமியார் பேச்சை முடித்துவிட்டு மோகினியைப் பார்த்து லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில், கணவன் என்கிற பூர்வாசிரம சீனிவாசனின் துயர ரேகையும், மகானாக மாறிய இப்போதைய சீனிவாச சாமியாரின் ஞானத் தெளிவும் ஒருங்கே தோன்றின.

சாமியார் கொடுத்த திருநீறை லீலா பயபக்தியுடன் வாங்கி மோகினியின் உடம்பு முழுவதும் தேய்த்தாள். அந்த அன்புப் பெருக்கில் விம்மிய மோகினி, சாமியாரை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். செதில் செதிலாக இருந்த அவள் கன்னங்களில், திருநீறு வெண்மையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

ரகுமணியுடன் அமர்ந்திருந்த கலா, அவனையும் அழைத்துக்கொண்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அம்மாவின் கன்னங்களில் வழிந்த நீரைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு, தன்னை அணைத்த அம்மாவைத் தானும் அணைத்துக்கொண்டாள்.

எல்லாம் தெரிந்தும், ஒன்றும் தெரியாததுபோல் விளங்கும் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு, ‘கோனை’ மரங்களில் மெல்லிய பூங்காற்றாய்ப் படர்ந்தெழுந்து, அனைவரையும் சுகமாகத் தடவிக் கொடுத்தது.