பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சத்திய வெள்ளம்

மணவாளன் மேலே தொடர்ந்தார்:

“இன்று நம்முடைய சமூக, அரசியல், பொருளாதார வானத்திலே கூடியுள்ள கருமேகங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இந்த மேகங்களின் தற்காலிக இருட்டு நம்மைப் பயமுறுத்துகிறது. நாம் ஒரு மகத்தான மாறு தலுக்காகக் காத்து நிற்கிறோம். நமது நாடு லஞ்சமும், ஊழ லும், பதவி ஆசையும், அதிகார வெறியும்இல்லாத ஒரு நற் காலத்தை எதிர்பார்த்துப் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் முன் நிற்கிறார்கள். நம்மால் வருங்காலத்தை மாற்ற முடியும் என்பதனால்தான் நிகழ் காலத்தை ஆள்கிறவர்களுக்கு நம்மேல் கோபம் வருகிறது. நம்மை அடக்குகிறார்கள்; ஒடுக்குகிறார்கள். நமக்கு மேலேயும் சுற்றிலும் இருளைப் படைக்கும் இந்த அதிகார மேகங்களால் ஒரு பெரிய மழை வரும். அந்த மழையால் ஒரு வெள்ளம், ஏன், ஒரு யுகப் பிரளயமேகூட வரலாம். அந்த மழையின் பின் அந்த யுகப் பிரளயத்தின் பின் ஏற்படவிருக்கும் சத்தியப் பிரவாகத்தில் நீந்தக் காத்திருக்கிறோம் நாம் அசத்தியங்களும், கொடுமை களும் அதிகாரங்களும், அடக்குமுறைகளும், அதிகமாகி, இருள் கனத்து மூடும் போதெல்லாம் இப்படித்தான் நாம் ஒரு சத்தியப் பெருக்கை அவாவி நிற்போம்.”

மணவாளனின் பேச்சு ஒருகணம் தடைப்பட்டது. திடீரென்று மேடையை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. ஆனாலும் மணவாளன் மேடையிலேயே நின்று தீரனாகப் பேசிக்கொண்டிருந்தார்; நெற்றிப் பொட் டில் ஒரு கல் விழுந்து குருதி சிந்தியது. அண்ணாச்சி மேடைமேல் தாவி ஏறி மணவாளனை மறைத்துக் கொண்டு முன் நின்றார். மாணவர்கள் கல்லெறிபவர்களைப் பிடிப் பதற்காக விரைந்தனர். போலீஸ் கைகட்டி நின்று கொண்டி ருந்ததைக் கூட்டத்தினர் எல்லோருமே பார்த்தார்கள். ஒரே கூப்பாடும் குழப்பமுமாகி இருந்தாலும் அப்போது யாரும் அங்கிருந்து கலைந்து போகவில்லை.