பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சத்திய வெள்ளம்

அலைகிறார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். பொழில் வளவனாரின் காக்கை பிடிக்கும் குணமும், வாழ்ந்தாருக்கு மாரடிக்கும் தன்னையும் பல்கலைக் கழக எல்லையில் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் இப்போது அவர் செய்யத் துணிந்திருந்த காரியம் வெறுப்பூட்டக் கூடியதாக இருந்தது. இதைச் செய்வதற்காக மல்லிகைப் பந்தலிலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருப்பது சற்றே மிகையாகப்பட்டது. பொழில் வளவனார் அவனிடம் பேசினார்:

“என்ன தம்பி சிந்தனை? நீயும் உன்னைச் சேர்ந்தவர் களும் தலைமை ஏற்றபின் பல்கலைக் கழக மாணவர் களிடையே தமிழுணர்வு குன்றிவிட்டதே என்பதுதான் என் வருத்தம். சொல்லப்போனால் இதுபோல் படம் சட்டம் போட்டு எடுத்துவர முன்பெல்லாம் நாங்கள் வரமாட்டோம். எங்கள் கட்டளையை ஏற்று உங்களைப் போல் மாணவர்கள் வருவார்கள். என்ன செய்வது ? இப்போது காலம் மாறிவிட்டது. இதற்கெல்லாம் நாங்களே வருவது தவிர வேறு வழி இல்லையே?”

“நீங்களாக அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா! தமிழ் உணர்வு மட்டும் போதும் என்பது உங்கள் கட்சி தமிழுணர்வோடு நியாய உணர்வும் வேண்டும் என்பது மாணவர்களாகிய எங்கள் கட்சி. அது தவறா ஐயா?”

“தவறொன்றும் இல்லை! ஆனால் விரிவுரையாளர் மதனகோபாலை வெளியேற்ற நீங்கள் மேற்கொண்ட போராட்டம் எங்களுக்கு உடன்பாடில்லை. பிழை புரிவது மனித இயல்பு. அதைப் பெரிதுபடுத்தி ஒருவர் வாழ்வைக் கெடுத்துவிடக் கூடாது! வேலையிலிருந்து துரத்தும்படி அவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார்?”

“அதுதான் நீங்களே சொல்கிறீர்களே, ஐயா, ஒருவர் வாழ்வைக் கெடுத்துவிடக் கூடாது’ என்று. பிழை புரிவது மனித இயல்பானால் அதைக் கண்டிப்பதும் மனித இயல்புதானே?” -