பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 389

தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி மேரி தங்கத்தின் பெற்றோரைச் சந்திக்கத்தான் அனுப்பினோம். அங்கே தற்செயலாக அவன் பிச்சை முத்துவைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது.”

“அந்தப் பிச்சைமுத்து கனு சன்யால், சாரு மஜும் தார் போன்றவர்களோடு தொடர்பு உடையவர்; சென்ற கோடை விடுமுறையில் அவர் மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு தீவிரவாதிகளின் முகாமுக்கு இரகசியமாகப் போய் வந்தவர் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

“எனக்குப் பிச்சைமுத்துவையே அப்போது தெரி யாதே; அவரைத் தெரிந்தால் அல்லவா இதெல்லாம் தெரியும்? நிலக்கோட்டைக்குப் போயிருந்தபோது கதிரேசன் தான் அவரைத் தற்செயலாகச் சந்தித்துவிட்டு வந்தான். அப்புறம் கடை வீதியில் ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோது அவரைக் கதிரேசன் எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். அப்படி அறிமுகப்படுத்தியபோது அவர் நிலக்கோட்டையில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பதை மட்டுமே நான் அறிந்து கொண்டேன். வேறு எதுவும் அப்போது எனக்குத் தெரியாது.”

சமீபத்தில் அவர் இங்கே வந்து கதிரேசன் வீட்டிலும் யூனிவர்ஸிடி விடுதி அறைகளிலும் நடத்திய இரகசியக் கூட்டங்களுக்கு நீங்கள் போனதுண்டா?"- டி.ஐ.ஜியே இதைக் கேட்டார்.

“கதிரேசன் வீட்டில் அவரைச் சந்திக்க நானும் நண்பர்களும் போயிருந்தோம். அவர் கூறிய சில கருத்துக்கள் எங்களுக்கு உடன்பாடாக இல்லாததால் திரும்பிவிட்டோம். அதன்பின் அவர் இங்கே எப்போது எந்த விடுதியில் யாரை எதற்காகப் பார்த்தார் பேசினார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது” - பாண்டியன் பதில் சொன்னான்.

“இனி இவர்கள் போகலாம்! இவர்களிடம் கேட்க ஒன்றுமில்லை.” என்று டி.ஐ.ஜி. குறிப்புக் காட்டிய பின்பே