பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து நான்காவது அத்தியாயம்

செயற்குழு முடிந்த தினத்தன்று இரவு பதினொரு மணிவரை அவர்களுக்கு வெளியே அலைச்சல் இருந்தது. மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்ததை இராவணசாமி யின் கட்சியைத் தவிர வேறு எல்லாக் கட்சித் தலைவர் களும் கடுமையாகக் கண்டித்துப் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார்கள். அதனால் நகரில் மாணவர்கள் மேல் அனுதாபம் ஏற்பட்டுப் பலர் தாங்களே தேடி வந்து நிதி உதவி செய்தார்கள். அன்றிரவு பாண்டியன் படுக்கச் செல்லும்போது ஒரு மணி. ஞாபகமாகக் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தான் அவன்.

நாலே முக்காலுக்கே தூக்கம் விழித்துவிட்டது. குளிய லறையில் போய் ஹீட்டரைப் போட்டு வெந்நீர் தயாரான தும் நீராடி உடை மாற்றிக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்குப் புறப்பட்டான் அவன். புறப்படுமுன் அறையில் படுக்கைக் கட்டிலுக்குக் கீழே இருந்த தனது பெட்டியைத் திறந்து அவன் எதையோ ஞாபகமாக எடுத்துக் கொண்டான். வெளியே குளிர் நடுக்கியது. மஞ்சு மூடிக் கட்டிடங்களும், மரம் செடி கொடிகளும் நீலப் பசுங் கனவுகள் போல் மலைகளும் வெள்ளை மஸ்லின் துணியால் மூடி வைத்த ஒவியங்கள் போன்று இயக்கமற்று இருந்தன. விடுதிகளும், பல்கலைக் கழகமும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. எங்கோ தொலைவில் ஒரு கோழி கூவும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. பாண்டி யன் விடுதிகளின் நடுவே மைதானத்தில் இருந்த வரந்தரு விநாயகர் கோயிலை நோக்கி நடந்தான். மாணவர்கள் இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டிய குறும்புப் பெயர் ‘பரீட்சை விநாயகர். கண்ணுக்கினியாள் தூக்கம் விழித்து எழுந்து வந்திருப்பாளோ அல்லது மறந்திருப்பாளோ என்று சிந்தித்தபடியே அவன் கோவிலை நோக்கிச் சென்றபோது அவள் முன்னதாகவே எழுந்து வந்து அங்கே காத்திருப்பதைத் தொலைவிலிருந்தே காண முடிந்தது. அந்த அதிகாலையில் வைகறைக் கன்னியாகிய உஷையே எழுந்து வந்து காத்திருப்பது போல் அவள் மிக மிக வனப்புடன் தோன்றினாள் அப்போது.