பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 46?

யாகிச் சிறை வாசலிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள் என்பதும் வீதியில் பெருங்கூட்டத்தைக் கூட்டிவிட்டது. ஒவ்வொரு வார்டிலும் அங்கங்கே அமைந் திருந்த ஒவ்வொரு தேசியப் படிப்பகத்திலும் ஊர்வலத்தை நிறுத்தி அண்ணாச்சிக்கும், மணவாளனுக்கும், தொழிற் சங்கச் செயலாளருக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றார் கள். ஊர்வலம் கடையை அடைய வெகுநேரம் ஆயிற்று. ஊர்வலம் கடை வாயிலை அடைந்ததும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அன்போடு வேண்டி னார்கள் மணவாளனும், பாண்டியனும். அண்ணாச்சி எல்லோரையும் நோக்கி மலர்ந்த முகத்தில் புன்முறுவ லோடு கைகூப்பினார். எந்தக் களங்கமும் இல்லாத அவருடைய அந்த முகமலர்ச்சியும், புன்முறுவலும் ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தன. சிறையிலிருந்து விடு தலையாகி வந்த அலுப்போ, களைப்போ, சோர்வோ சிறிதும் இன்றிக் கடை முகப்பில் வரிசையாக அடுக்கி யிருந்த சாக்லேட் பாட்டில்களில் இருந்து இரு கையும் நிறைய மிட்டாய்களை அள்ளிக் கூட்டத்திலும் கடை முன் புறமும் இருந்தவர்களில் சிறுவர், சிறுமிகளைத் தேடிச் சென்று இந்தா, மிட்டாய் சாப்பிடு’ என்று அவர்களுக்கு மிட்டாய் வழங்கத் தொடங்கிவிட்டார் அண்ணாச்சி. மணவாளனும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், தொழிற் சங்கச் செயலாளரும் மற்றுமுள்ள மாணவர் பிரதிநிதிகளும் கடையின் பின்புறமுள்ள அறைக்குச் சென்றனர். பாண்டியன், தான் மல்லிகைப் பந்தலுக்கு வந்தவுடன் பூதலிங்கத்தைச் சந்தித்ததையும், அவர் யோசனையின் படியே துணைவேந்தர் தாயுமான வனாரைச் சந்தித்ததையும், தாயுமானவனார் தன்னையும் எதிரே வைத்துக் கொண்டே ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் செய்ததையும் மணவாளனிடம் விவரித்தான்.

“அண்ணன் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது! அண்ணாச்சியும் நீங்களும், நம்ம தொழிற் சங்கச் செயலாளர் அண்ணனும் விடுதலையாகணும்கிற ஒரே ஆசைக்காக நான் வி.சி.யிடம் பொய் கூடச் சொல்லி நடிக்கும்படி நேர்ந்துவிட்டது."