பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 509

விழா முடிந்ததும் பாண்டியன், மணவாளன், கண்ணுக்கினியாள் மூவரும் முருகன் கோவிலுக்குப் போனார்கள். குருக்கள் தீபாராதனை செய்து மூவருக்கும் மாலை சூட்டினார். உடனே மணவாளன், “பாண்டியன்! உனக்கு நினைவிருக்கிறதா? பட்டமளிப்பு விழாப் போராட்டத்துக்கு முந்தியதினம் இரவு நீ, நான், தங்கச்சி, அண்ணாச்சி எல்லோருமாக இங்கே சாமி கும்பிட வந்த போது, “மாலையைக் கழட்டாதீங்க! கொஞ்சம் அப்படியே நில்லுங்க! உங்களைக் கண்குளிர பார்க்கணும்போல் இருக்கு உங்க கல்யாணத்துக்கு நான் வர முடியாட்டியும் இப்பவே கண் நிறையப் பார்த்துக்கிடுதேன் என்று அண்ணாச்சி சொன்னாரே. எவ்வளவு பெரிய ஞானி அவர்?” என்று பழைய சம்பவத்தை நினைவுபடுத்திய போது பாண்டியனும், கண்ணுக்கினியாளும் கண் கலங் கினார்கள்.

அப்போது மணவாளன் சொன்னார்: “இங்கே இன்றும் நாளையும் இந்தப் பல்கலைக் கழகம் இருக்கும். நிறைய மாணவர்களும், மாணவிகளும் படிக்க வரு வார்கள். ஆனால் நம் தலைமுறையில் நாம் படித்தபோது நமக்கு இங்கே ஒர் அண்ணாச்சி கிடைத்ததுபோல் நாளைப் படிக்க வரப்போகிறவர்களுக்கு இங்கே ஒரு சத்தியமான காவல் தெய்வம் இருக்காது! அந்த வகையில் நாம்தான் பாக்கியசாலிகள் பாண்டியன்!”

“அண்ணன் சொல்வது சரிதான்! ஆனால் அண்ணாச்சி ஒரு மனிதர் மட்டுமில்லை. அவர் ஒரு தத்துவம். அந்தத் தத்துவம் என்றும் இங்கே அழியாது. இந்த மலைகளும் அருவிகளும் வானமும் பூமியும் உள்ள வரை இங்கே அதுவும் இருக்கும்” என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் கண்களிலும் கண்ணுக் கினியாள் விழிகளிலும் ஈரம் பளபளத்தது. பேசிக் கொண்டே அவர்கள் கோவிலிலிருந்து திரும்பும் போது மல்லிகைப் பந்தலில் மெல்ல மெல்ல அஸ்தமித்து இரவு தொடங்கியிருந்தது.