பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திய வெள்ளம்

கதைமுகம்

இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைபெற்றுக் கால் நூற்றாண்டு முடியப்போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெறவேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்துவிட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

பணமே அதிகாரமாகவும் செல்வமாகவும் இருந்த காலம் மாறி அதிகாரமே பணமாகவும் செல்வமாகவும் இருக்கிற காலம் இப்போது கண்ணெதிரே மிகவும் பச்சையாகத் தெரிகிறது. இவற்றை எதிர்த்து, நேற்றும் இன்றும் போராட்டங்கள் நிகழ்ந்தன. நிகழ்கின்றன. நாளையும் நிகழலாம். அதிர்ஷ்ட வசமாக இன்றைய போராட்டங்கள் இளைஞர்களின் கரங்களில் வந்துவிட்டன. தொழிலாளிகளின் கரங்களிலும் விவசாயிகளின் கரங்களிலும் அறிவாளிகளின் நினைவிலும் அவை வந்திருப்பதே ஒரு பெரிய மாறுதலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/7&oldid=608800" இலிருந்து மீள்விக்கப்பட்டது