பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

17




போற்றுதற் குரிய பண்பைப்
போற்றிடத் தயங்க மாட்டான்;
ஆற்றுதற் குரிய தொண்டை
ஆற்றாமல் நிற்க மாட்டான்;
சோற்றினில் உப்பைப் போலச்
சுவைதரும் ஊட லுக்குத்
தோற்றிடத் தயங்க மாட்டான்,
தோல்வியே காணா வீரன்.


பஞ்சைகள் வடிக்கும் கண்ணீர்
பாய்ச்சிடும் ஈட்டி யென்றே
அஞ்சுவான்; சிறுத்தை போல
ஆயிரம் தம்பி பெற்ற
மிஞ்சிய செருக்கி னாலே
மேல்வரும் படைகட் கஞ்சான்,
அஞ்சுதற் கஞ்சு கின்ற
அஞ்சாமை மிக்க வீரன்.


புறப்பட்ட சிகந்தர் என்னும்
புலிக்குட்டி முன்னால், அந்நாள்
சிறைப்பட்டார் மன்னர் பல்லோர்;
சிறகொடிந் தழிந்தார்; அண்ணாத்
துரைப்பட்ட தாரி முன்னால்
தோள்தட்டி வந்த பேச்சு
நுரைப்பட்டா ளத்தார் எல்லாம்
நொடியினில் தோற்றுப் போனார்.