பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவுகோல் மூளை அறிஞர்




வாழை இலைபோல் வகிடெடுத்த கலைஞர்
'கோழை' என்னும் சொல்லையே வெறுப்பவர்
பழகியதும் எவரையும் பார்த்துக் கணிக்கும்
அளவுகோல் மூளை அறிஞர்; நல்ல
திட்டத்தை உடனே செயற்படுத் துவதில்
பட்டாசு போலப் பற்றி வெடிப்பவர்.


காட்டு மயிலுக்கு நீட்டிய தோகையும்
ஆட்டுக்கு வாலும் அளந்து வைப்பவர்
கருதியது முடிப்பதில் வரிப்புலி, எதையும்
மறவா திருப்பதில் மத்தகக் களிறு.


சந்தக் கவிதைகள் சிந்தும் நாங்களோ
குந்தி யிருந்து கூவும் குயில்கள்.
இவரோ-
பறந்து கொண்டே பண்கள் உதிர்க்கும்
சிறந்த வானம் பாடிப் பறவை.