பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

27





இறைவன் தந்த தமிழ்


கங்கையைச் சடையில் காக்கும் சிவனார்
தங்கையில் பிடித்த தமருகப் பெண்ணின்
இடுப்பைப் பிடித்து நொடித்த பொழுது
வடுப்படாத் தமிழும் வடமொழிப் பாடையும்
தடுக்கி விழுந்த தாகச் சொல்லுவர்
கடலைக் குடித்த பெருவிரல் அகத்தியன்
வடமலை விட்டுக் குடமலை நோக்கிப்
புறப்பட்ட போது புதுத் தமிழ் இறைவனால்
தரப்பட்ட தாகத் தமிழ் நூல் கூறும்
பண்டிதர் வழங்கும் பதினெட்டு மொழியையும்
அண்ட முதலான் ஆக்கினான் என்றும்
ஆரியம் செந்தமிழ் ஆகிய இரண்டையும்
காரிகை உமைக்குக் கற்றைச் சடையன்
அருகில் இருத்தி அருளினான் என்றும்
திருமூல நாயனார் பெருமையோ டுரைக்கிறார்
'ஆண்டவன் படைப்பன்றோ ஆரியம்!' என்று
நீண்டதோர் முழக்கம் 'செய்பவாள்' உணர்க
ஆரிய மொழியைப் பாணினிக் கன்று
தாரை வார்த்துத் தந்தவன் எவனோ,
அவனே-அந்தச் சிவனே-எங்கள்
சிதையாச் சீரிளஞ் செல்வியைத் தந்தவன்.