பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முருகுசுந்தரம்


 மந்திரத் தமிழ்


ஆரியம் ஒன்றே மந்திரம் என்று
வீரியம் பேசும் வீணரே! கேட்பீர்!
'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்' என்பதாய்
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனார்
சொல்காப் பியந்தரும் சொற்பொருள் உணர்க!
நிறைமொழி மாந்தரின் பொருளுணர் வீரோ?
நிறைமொழி மாந்தரும், அவர்தம் ஆணையாம்
மறைமொழி, மந்திரம் எங்களுக் கில்லையோ?
கங்கைக் கரையில் அன்றிஅம் மாந்தர்
காவிரிக் கரையில் வாழ்ந்த தில்லையோ?
அரசியல் நிறுவிப் பொருளியல் ஆய்ந்து
முரசு முழக்கிய மூத்த தமிழர்கள்
அறியாத மந்திரப் பெருமையை-அந்நாள்
வாழ்விடம் இன்றி வழியெலாம் மேய்ந்து
கண்ட படிவாழ்ந்து களைத்துக் கடைசியில்
ஒண்டவந் தவரென்ன கண்டு கிழித்தீர்?
ஆரியம் ஒன்றே ஆண்டவன் விரும்பும்
அருச்சனை என்பதாய் உளறும் கோயிற்
பெருச்சா ளிகளுக் கொன்று கூறுவன்:-
'அருச்சனை பாட்டே யாகும்
ஆதலால் மண்மேல் தம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்’
செந்தமிழ் அருச்சனை செய்யென ஆண்டவன்
சுந்தர மூர்த்திக்குச் சொன்னதிக் கட்டளை