பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

முருகுசுந்தரம்




பழுத்த இலை சருகாகி உதிரும்; வெள்ளைப்
பால் நிலவே உதிர்வதென்றால் சகிப்போ மாநாம்?
செழித்த குலை வாழையைப்போல் மனைவி, அன்பாய்ச்
சேர்த்தணைத்த தளிர்க்கையை ஒதுக்கி விட்டு
மொழிப்போர்க்கு வந்தவனை இழந்து விட்டோம்;
முட்டையிலே சரபத்தைப் பறிகொ டுத்தோம்;
தழைத்தவொரு காப்பியத்தை, வளர்வ தற்குள்
தற்சிறப்புப் பாயிரத்தில் முடித்து விட்டோம்.



கார்மேக வட்டத்தைச் சட்ட மிட்ட
கருப்புக் கண்ணாடியினைத் துடைத்த வண்ணம்
மார்தட்டிச் சிரிக்கும்ஆச் சாரி காலில்
மானமற்ற தமிழினத்தார் சாய்ந்தால், பின்னர்
ஆர்தட்டிக் கேட்பதற்கு முடியும்? தூய
அருந்தமிழைத் தீர்ப்பதற்குக் கத்தி தீட்டும்
போர்பந்தர்ச் சம்பந்தி நினைத்தால், நானும்
புதைகுழியை நோக்கித்தான் போக வேண்டும்.



கண்ணையிடத் தப்பியதும், நந்தன் செந்தீக்
காட்டுக்குள் குளித்ததுவும், புராணம். யாழின்
பண்ணொழுகு செந்தமிழே! இவைகள் உன்றன்
பதமலருக் கினிப்புதிய வரலா றாகும்.
தண்ணீரைத் தெளிப்பதனால் அமைதி யுற்றுத்
தணிவதில்லை எரிமலைகள்; மதக்க ளிற்றைக்
கண்ணிவைத்துப் பிடிப்பதற்கு முயல்கின் றார்கள்;
கட்டாயம் தோல்வியினைச் சந்திப் பார்கள்.