பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாவின் வீணை




ஆரூர்ச் சோலைக் குயில் கூவுது-எங்கள்

அண்ணாவின் வீணை கவிபாடுது.
(ஆரூர்)


செந்தமிழ்ப் புலவர்க்குக் கைநீட்டுது-கற்புச்
செல்விக்குக் கடலோரம் சிலைநாட்டுது
வந்தவர் மகிழ்வூற முகங்காட்டுது-எங்கள்

வரலாற்றைப் பொன்னேட்டில் இதுதீட்டுது
(ஆரூர்)


பிச்சைக் காரர்க்கு நிதிதேடுது-தான்
பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடுது
உச்ச வரம்பை உளம் நாடுது-எங்கள்

உள்ளத்தில் சமதர்ம விதைபோடுது
(ஆரூர்)


மத்திய அரசாங்கம் செவிசாய்க்கவே-இது
மாநில சுயாட்சிப் பண்பாடுது
கத்தி முறையாலே சாதிப்பதை வெறும்

கடைக்கண் அன்பாலே சாதிக்குது
(ஆரூர்)


மாளிகை அரசாங்க முறைமாற்றுது-பொது
மக்கள் அரசாங்க நிலைபோற்றுது
வாழ முடியாத வறியோர்க் கெல்லாம்-புது
வசந்தம் வரவேண்டி இதுகூவுது

(ஆரூர்)