பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரூர்க் காதலர்




சோலை இளவரசி சுந்தரப் பைங்கிளியே!
காலைக் கதிரொளியில் கண்பறிக்கும் மரகதமே!
தாமரை இலையுடம்புத் தத்தையே! கொய்யாவாம்
மாமியார் வீட்டில் மகிழ்ந்தாடும் மருமகளே!
அக்கா அக்காவென்று வக்கணைச் சொல்பேசிப்
பெண்ணின் தோளேறிப் பெரும்பழம் என நினைத்துக்
கன்னத்தைக் கோதிக் காதலிக்கும் கண்மணியே!
கொஞ்சு மொழிபேசும் அஞ்சுகமே! ஆரூரில்
அஞ்சுகத் தாய்பெற்ற ஆணழகன் பெருமையினைக்
கொஞ்சம் எனக்குக் கூறாயோ? உன்வாயால்
குளறி மொழிந்தாலும் குற்றமில்லை! சேலத்தின்
அழகா புரத்துக்கு அருகிலுள்ள மாந்தோப்பில்
தேனைப் பதம்செய்து, செம்பில் நிரப்பிவைத்து
ஆனைத் தலைபோல் அசைகின்ற மாம்பழங்கள்
உண்ணக் கொடுப்பேன் ஓடிவா அஞ்சுகமே!
எத்தனை நாட்கள் என்தலைவ னைப்பிரிந்து
நத்தை இரவை நகர்த்துவேன் பசுங்கிளியே!