பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

51




காலை பத்துமணி காண்பதற்கு நன்னேரம்;
குளித்து முடித்துக் கும்பிட்ட கையோடு
பளிச்சென்று முன்வருவான்; பசுங்கிளியே! அவனுடைய
பின்னழகைப் பார்த்தால் பெருமதிப்பு மிகத்தோன்றும்
முற்றிக் கனிந்த முதுமை பளபளக்கும்;
கற்ற பெரும்புலமை காட்சிதரும்; காண்பாய்நீ!
முன்னழகை நோக்கினால் முழுதும் வியப்படைவாய்!
பத்து வயதைப் பக்குவமாய்க் குறைப்பதற்குக்
கத்திபோல் மீசை கச்சிதமாய் வைத்திருப்பான்.
ஒற்றை யடிப்பாதை ஊர்நடுவே செல்லுதல்போல்
நெற்றிக்கு மேலே நெடுவகிடு பெற்றிருப்பான்:
வெள்ளை உடைப்பிரியன்; வேகமாய் எப்போதும்
துள்ளி நடப்பதன்றி மெள்ள நடந்தறியான்.
தன்னைவெளிப் படுத்தாமல், தன் முன்னால் இருப்பவரின்
எண்ணத்தை அளப்பதற்கு ஏற்றவொரு கருவியாய்க்
கறுப்புக் கண்ணாடியை விருப்பமுடன் அணிந்திருப்பான்.


உன்னிடத்தில் ஒருசேதி உரைக்கின்றேன்; நீயதனை
உள்ளத்தில் போட்டுவை; ஒருவரிடம் சொல்லாதே!
என்னைப்போல் காதலியர் இவனுக்குப் பலருள்ளார்.
வாணியம் பாடியிலே வாழ்கின்ற கைகாரி
முகம்மதியப் பெண்ணின்மேல் மூண்டபெருங் காதலினால்
அகம்நொந்து பித்தாகி அலைந்து திரிவதுண்டு.
எண்ணம் அவள்மீது இருக்கின்ற நேரத்தில்
என்னுடைய காதலினை எடுத்தங்குச் சொல்லாதே!
குளறுவாய்க் கிளியென்ற குற்றம் உடையள்நீ!
உளறி விடாதே, உள்ளநிலை, அறியாமல்.