பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சந்தனப் பேழை

57




வானவில்லை எட்டிவிட்டோம் என்றி ருந்தோம்
வங்காளக் கடலுக்குள் தள்ளப் பட்டோம்
கூனலிளம் பிறையெடுத்து முடியும் போது
கொடும்பாம்புப் பற்களுக்குள் சிக்கிக் கொண்டோம்
மீனரசு செய்கின்ற வான வீதி
விளக்கைப்போல் இருந்தவனே! உன்னை மீண்டும்
காணுதற்கு முடியாதாம்; இக்கு ருட்டுக்
கண்களுக்கு முகத்திலினி என்ன வேலை?


இனிமேலும் விண்ணுக்கு மதிய மில்லை;
இளந்தென்றல் இந்நாட்டுக் கினிமேல் இல்லை;
கனியில்லை பூவில்லை சோலைக் குள்ளே;
கரைந்ததுவா காற்றினிலே காஞ்சிக் கீதம்!
குனியாத புகழில்லை; மலையின் உச்சிக்
கோபுரத்து விளக்கில்லை; தம்பி யர்கள்
இனியேங்கி விடுவதற்குப் பெருமூச் சில்லை;
இருவிழியில் அழுவதற்குக் கண்ணீர் இல்லை.


சுனைத்தண்ணீர் இனியெமக்குச் சுடுநீர்ப் பொய்கை!
சோலையெல்லாம் முட்புதரே! மேல்வி ழுந்து
நனைக்கின்ற குளிர்மழையோ நெருப்புத் தாரை!
நல்லாவின் பாற்கோப்பை நச்சுக் கோப்பை!
பனிமலர்கள் பார்ப்பதற்குப் புண்கள்! வெள்ளைப்
பால்நிலவோ வெறுந்தழும்பு! பூணு கின்ற
அணிமணிகள் உடம்புக்குச் செந்தேள்! இன்பம்
அத்தனையும் இனியெமக்குத் தூண்டில் முள்ளே