பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தையாட்சி!



மார்கழியின் காலடியைத் தொடர்ந்துவந்து
மணம்பேசும் மாப்பிள்ளை தையே! பெய்யும்
கார்ப்பருவக் காலத்தில் காதல் நட்டுக்
காத்திருக்கும் காதலர்கள், இதழ் நிலத்தில்
வேர்க்கரும்பு முத்தத்தை அறுக்கும் தையே!
விரல்கோக்கும் விழாத்தையே! இளைய பெண்டிர்
வார்த்தைவாய்ப் பாட்டடக்கி, மேனி வீணை
வாசிக்க விழாவெடுக்கும் தையே! வாழ்க!


இறால்மீனைப் போன்றிருக்கும் செழித்த மஞ்சள்
எடுத்தரைத்து முகத்துக்குப் பூசித், தங்கள்
வரால்மீனைப் போன்றிருக்கும் கணுக்கால் நோக
வாசலுக்குக் கோலமிட்டு, மேனிப் பாரம்
பொறாதஇடை நடுநடுங்க நடந்து, பொங்கற்
புதுப்பானைச் சோறெடுத்துப் படைத்துக், காதல்
அறாத தமிழ் மொழியாலே அத்தான் என்றே
அத்தைமகள் வரவேற்கும் தையே! வாழ்க!