பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனவு கலைக்காத தூக்கம்



வீங்கும் கடலலையே! வேதனைத் தீக்காட்டில்
ஏங்கும் தமிழர் இதயச் சருகெரியத்
தூங்கும் தலைவன் தூங்கட்டும்; அவனருகில்
வீங்கும் கடலலையே! வீணிரைச்சல் செய்யாதே!


மேலேறும் செங்கதிரே! மிக்க களைப்போடு
சேலேறிப் பாயும் சென்னைக் கடற்கரைக்குக்
காலார வந்து கண்ணுறக்கம் கொள்ளுகின்றான்:
மேலேறும் செங்கதிரே! மேனியின்மேல் காயாதே!


கொட்டும் பனியே! கொஞ்சு தமிழ்த்தலைவன்
பட்டுடம்பு புண்ணாகிப் பளிங்குத் தளமமைத்த
தொட்டில் நடுவே தூங்குகிறான்; அவனுடம்பைக்
கொட்டும் பனியே! குளிரால் நடுக்காதே!


கார்முகிலே! எங்கள் காஞ்சி நகர்த்தலைவன்
பார்முழுதும் சுற்றிப் பட்டம் பலபெற்றே
ஊரின் கிழக்கில் ஒய்வெடுத்துக் கொள்ளுகிறான்;
கார்முகிலே! ஓங்கிக் கனைத்தவனை எழுப்பாதே!