உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧00

சந்திரிகை

துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்). இந்த உபதேசத்தை நீ ஒரு போதும் மறக்காதே.என் கண்ணே, என் உயிரே, விசாலாட்சி, நீ என்ன நேர்ந்தாலும் மனத்தைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டுமென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து ஸைஹிக்க மாட்டேன்” என்று பலபல சொல்லி மனைவியை சமாதானப்படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலேயே விசாலாக்ஷியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்ட விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் வைத்தியர் வந்துவிட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாக்ஷியை காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படுமென்றும், ஆதலால் இனிமேல் விசாலாக்ஷி தன் கணவனை அடிக்கடி தனியாக ஸந்திக்கக் கூடாதென்றும், அப்படியே ஸந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும் எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன்