சபாபதி முதலியாரும் பேசும் படமும்
முதல் காட்சி
சபாபதி முதலியார் வீடு: சபாபதி முதலியார். சாய்வு நாற்காலியில் முகவாட்டத்துடன் உட்கார்ந்திருக்கிறார். வேலையாள் சபாபதி ஒரு தட்டில் பலகாரத்தையும் காபியும் எடுத்துக் கொண்டு வருகிறான்.
வே. ச. ஏம்பா கடியாரம் மூணு அடிச்சு ரொம்ப நாழியாச்சே காப்பி கொண்டார என்னை ஏன் கூப்பிடலே!
ச. மு. தட்டை அந்த டீப்பாய் மேலே வை. . வே. ச, ஏம்பா ஒருமாதிரி உக்காந்திருக்கிறே!
ச. மு. ஒண்ணுமில்லேடா,
வே. ச. ஏம்பா, ஒண்ணுமில்லேடாண்ணு சொல்ரதையே ஒரு மாதிரியா சொல்ரையே அதிலேயே தெரியலையா அண்ணைக்கி அரை - மணி நேரம் காந்திதாத்தா யாரும் பேசக்கூடா துண்ணு சொன்னாருண்ணு சும்மா திருப்பி திருப்பி சொன்னையே நீ மாத்திரம் பொய் பேசலாமா! -
ச. மு நான் எங்கேடா பொய் பேசனே.
வே. ச, இதோ பாரப்பா உம்மனசிலே இருக்கிறதை நான் சொல்றேன் அது நெசமா இல்லையாண்ணு சொல்லணும்,
ச. மு. சொல் பார்க்கலாம்
வே. ச. நேத்து அண்ணி அவங்க அம்மா வூட்டுக்கு போயிருக்காங்களே.அவர்களை பத்தியே நெனைச்சிகினு இந்த மாதிரி மூஞ்செ வெச்சிகினுருக்கே!
ச. மு. டேய் -நான் பொய் பேசக்கூடாது. நீ சொன்னது நெஜந்தான்--இது எப்பட்ரா உனக்கு தெரிஞ்சுது.