பக்கம்:சமணமும் தமிழும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமய த‍த்துவம்

11


. ஐந்து புலன்களும், ஐம்புலன்களால் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெய்யிலும், நிழலும், ஒலியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்தப் புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியவற்றையும் புத்கலப் பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்தை அடைவது புத்கலப் பொருளினாலேதான்.

தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்தியாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு) தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறதோ அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின் உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும் பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

"தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்
அப்படித் தாகி அதன்மாத்தி காயமும்
எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்"
                                        (மணிமேகலை 27: 187-190)