பக்கம்:சமணமும் தமிழும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

௩. சமணமுனிவர் ஒழுக்கம்


வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், பதிதர்மம் என்றும் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய பதிதர்மம், உலகத்தைத் துறந்து விடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, பதிதர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாத தாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.

பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொமுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர். அவையாவன :-மாவிரதங‍்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக விளக்குவாம்.

மாவிரதங்கள் ஐந்து:-- 1. அகிம்சை . 2. வாய்மை , 3. கள்ளாமை. 4. துறவு. 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களை யும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

1. அகிம்சை: “அகிம்சா பரமோ தர்ம" என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது. “ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்லமாட்டேன்;

ச.த.-2