பக்கம்:சமணமும் தமிழும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சமணமும் தமிழும்


என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப்பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.

உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்,” என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:

“ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்
பொய்கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்” (சிந்தாமணி. 2834)

“கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப் பிறர்மனைகள் மேல்
சேறலின்றிச் செழும் பொருண்மேல் சென்ற சிந்தை வேட்கையினை
ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடியதா மென்றான்
நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா நோக்குவான்.” (நீலகேசி. 40.)

சமிதிகள் ஐந்து: 1. இரியை. 2. பாஷை, 3. ஏஷணை. 4. ஆதான நிக்ஷேபனை. 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம்:

1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். “நூற்கதி கொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,”