பக்கம்:சமணமும் தமிழும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணமுனிவர் ஒழுக்கம்

23


2. துதி: இருஷபர் முதலிய இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

3. வணக்கம்: அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீக்ஷை கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.

4. பிரதிகிர்மணம்: பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினம் சேராதபடி காத்துக்கொள்ளுதல்.

5. கழுவாய்: அஃதாவது பிராயசித்தம். சமணமுனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்த்து விட்டால், அதனை யுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக் குற்றத்தைக் கழுவுதல்.

“ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
நின்று நினைந்திரங்கற் பாற்று.”

“தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கிக்
தூயவழி நிற்றலும் அற்று.” (அருங்கலச் செப்பு)

6. விசர்க்கம்: காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்கள் அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும் போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

“பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை” என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர் நிலையையடைந்த சமணமுனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் எழு ஒழுக்கங்கள். அவையாவன: 1. லோசம். 2. திகம்பரம், 3. நீராடாமை. 4. தரையிற்படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏக புக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.