பக்கம்:சமணமும் தமிழும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சமணமும் தமிழும்


மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

எனவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும் அவை கி. மு. மூன்மும் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமண சமயம் கி. மு. மூன்றாம் கற்றாண்டில் தமிழ் நாட்டிஸ் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென் திசை நோக்கி வந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத்தக்கது.

வடநாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத் துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலம் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக்கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ் நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பௌத்த மத நூலில், இலங்கையிலே கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி. மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத்தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக்கொடுத்தான் என் மகாவம்சம் கூறுகிறது." [1]


  1. மகாவம்சம். X. 97, 98, 99.