பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

கின்றன. முன்பும் வந்தன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கே வருகின்றவர்கள் இந்த நாட்டினுடைய மொழியினுடைய உதவி இல்லாமல் அந்த சமயத்தை அவர்கள் பரப்ப முடியாது. சங்க காலததில், இந்த சமயங்களின் செல்வாக்கு மிகுதியாக இல்லை பெரும்பாலும் சங்ககால இலக்கியங்கள் உடல் உள்ளம் பற்றிய வாழ்க்கையைத் தான் மிகுதியாகச் சிந்தித்தன. பக்தி இலக்கிய காலம், சமய இலக்கிய காலம், உயிர் வாழ்க்கைபற்றி மிகுதியாக சிந்தித்தன

சமண நூல்களில் பல இலக்கண நூல்களாக அமைகின்றன. நன்னூல் அனைவரும் அறிந்த இலக்கண நூல். ஆனால் அதேபோன்று பெளத்த இலக்கண நூல்தான் முதலில் ஐவகை இலக்கணத்தைக் குறிப்பிட்டது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்கின்ற மூவகை இலக்கணம் அமைந்தாலும் ஐவகை இலக்கணம் அதில் கூறப்பட்டிருந்தாலும, ஐவகை இலக்கணம் என்ற பெரும் பிரிவை அல்லது பகுப்பைத் தோற்றுவித்தது. பெளத்த சமய வீர சோழியம் என்ற இலக்கண நூல். அதேபோன்று பெளத்த இலக்கியத்தில் மணிமேகலை காப்பியத்தை நாம் அறிவோம். சமணர்களுக்கும் பெளத்தர்களுக்கும் ஏற்பட்ட சில போராட்டங்கள் காரணமாக, குண்டலகேசி, நீலகேசி தோன்றிய நிலையை நாம் அறிவோம். ஆனால், இந்தச் சமயங்கள் போராட்டம் நடத்தியபோது தமிழுக்குப் பெரும் வளர்ச்சியாக அமைந்தன. அதனால் சமயங்கள் வாயிலாக, தமிழ் மொழிக்கு மிகுதியான நூல்கள் கிடைத்தன. தமிழுக்கு நாம் சங்கங்கள் வைத்திருந்தோமே அதேபோன்று வச்சணந்தி என்ற சமணர் ‘த்ரமிள’ சங்கத்தை மதுரையிலே தோற்றுவித்தார். அதோடு மட்டுமல்லாமல், யாப்பிலக்கணம், யாப்பிலணக்கக் காரிகை போன்ற நூல்களும் தோன்றின, வச்சனந்தி மாலை, அவிநயம், இந்திர காளியம், அமுத சாகரம் போன்றவைகள் சமணர்களால் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள். ஆனால் அதேநேரத்தில், அவர்கள் சிந்தாமணி போன்ற மிகச் சிறந்த இலக்கியங்களையும் படைத்துத் தந்தார்கள்.