பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 9

எழுச்சிகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றைக் கண்டுணர்ந்து மகிழ்வதுடன் பிறருக்கும் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் எனபதே அப்பெரு நோக்கமாகும்.

கட்டுரையாசிரியர் விட்ட குறையை நிறைவு செய்யும் வகையில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை அல்லது பாடல் வரியை எடுத்துக்காட்டவிழைகிறேன்.

இலெந்து நாட்கள் எனும் நாற்பது நோன்பு நாட்களைக் கிறிஸ்தவ சமுதாயம் அனுசரித்து வருகின்ற இந்தக் கால கட்டத்தில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைச் சிறப்பாகத் தியானிப்பது வழக்கம் அதைக் கிறிஸ்தவக் கம்பராகப் போற்றப்படும் கிருஷ்ணப் பிள்ளை அவர்களின் சிலுவைக் காட்சிப் பாடல் ஒன்றை இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

"கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேற
                                     பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ
                                     சனநிதியை
உள்ளமுவப் புறுதேனை, உயிர்க்குயிரை
                                     உலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவை
                                     மிசைக் கண்டேனே"

சிலுவையில் இயேசுவின் உடல் ஆணிகளால் அடிக்கப்பட்டுள்ளது. இரத்தம் பீரிட்டுத் தெறிக்கிறது பார்ப்பதற்குக் கொடூரமாகத் தோன்றும் இக்காட்சியைப் பிற நாட்டுக் கவிஞர்கள் பலர் நெஞ்சுருக்கும் பாடல்களால் விளக்கியிருக்கிறார்கள். இயேசுவின் உடல் வாதைகளையும் அவர் முகத்தில் தோன்றிய வேதனைக் குறிப்புகளையும் பற்றிப் பாடியிருக்கிறார்கள். கவிஞர் கிருஷ்ணப் பிள்ளையோ, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கும்போது,