பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்துரை

சமண, பெளத்த, கிறிஸ்தவ இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரையாளர்கள் நால்வரும் நாடறிந்த தமிழ்த்துறை வல்லுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தனி முத்திரை பதித்தவர்கள்; அதற்காக அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்கள், இவர்கள் வடித்த கட்டுரைத் தொகுப்பு வாழ்த்துரை வேண்டுவது மரபின்பாற்பட்ட செயல் என்றே கருதுகின்றேன். தன் நூலையே நன்னூல் எனக் குறித்த பவணந்தி முனிவர் முகவுரை தருவதற்கெனக் குறித்த நெறிமுறையின் எல்லையில் நான் வருவதற்கில்லை எனபதையுணர்கின்றேன். தமிழன்னையின் மீது தனியாப் பற்றுக்கொண்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் என்ற அன்பினால் தமிழகக் காவல்துறை சார்ந்த என்னை கட்டுரைத் தொகுப்பு பற்றிய கருத்தினைக் கூறட்டுமே என்ற அன்புக் கட்டளையை கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள் பிறப்பித்திருக்கிறார் என்றே எண்ணுகின்றேன்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உறவுமுரசு முழக்கினான் கணியன் பூங்குன்றன்; ஒன்றே குலம் ஒரு வனே தேவன்' என்ற உளநலத்தென்றல் திருமூலர்வழி தவழ்கிறது நல்லவை எவையோ அவையெல்லாம் உனக்கு வேண்டுவன என்பதை ‘கடன் என்ப நல்லவையெல்லாம்’ என்ற கட்டளை மூலம் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். ஒளிவடிவான இமைவனையே தொழுகிறார் தாயுமானவர்: வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை நிறுவுகிறார். வேதநாயகர் சருவ சமயகீர்த்தனை பாடுகிறார் இவை யாவும் தமிழரின் பொதுமையறவுணர்விறகுப் பொய்யாத சான்றுகளாகும். இந்த மண்ணிலே தோன்றிய இலக்கியங்களில் மாசு பிறக்குமோ?

‘தமிழிலக்கியக் கடலிலே நீந்திக் களிக்கும், தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களில் திளைத்து நிற்கும் செல்லப்பனார் 'தமிழ் வளர்ச்சியில் இஸ்லாமிய இலக்கியத்தின் பங்கு' எனும் தலைப்பில் பெருங் கவிஞர்களிலிருந்து புதுக்கவிதை பாடு-