பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மணிக் காவிய அழகை சிந்தையெல்லாம் கொள்ளை கொள்ளும் முறையில் எடுத்துரைத்துள்ளார். கவிதை வானில் கற்பனைச் சிறகுவிரித்து களித்துப் பாடி மகிழும் வானம்பாடி சிந்தாமணிக் கடலில் மூழ்கி சிறந்த முத்துகளை அள்ளித்தந் திருப்பதைக் காணும்போதுதான் பாம்பறியும் பாம்பின் கால் என்பதன் பொருள் சிறக்கப் பார்க்கின்றோம். திருத்தக்க தேவரை மேத்தா போற்றுகிறாரே தவிர சமணரை முஸ்லிம் ஒருவர் போற்றுகிறார் என்று சொல்வதற்கில்லை.

கிறிஸ்தவ இலக்கியம் பற்றி டாக்டர் அறவாணன் அவர்கள் கட்டுரை படைத்துள்ளார்கள், பொதுவாகக் கிறிஸ்தவர்கள் செய்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டுகின்றாார். ஆனால் ஏனோ மிகச்சிறந்த தமிழ்த் தொண்டாற்றிய சான்றோரின் பெயர்களைக் கூட குறிப்பிடாமலே சென்றுள்ளார். மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் வணிகம் செய்ய வந்தார்களா? மதம் போதிக்க வந்தார்களா? மக்களை அடிமைப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வந்தார்களா? எனபது குறித்தே அவர் கட்டுரை செல்கிறது. கிறிஸ்தவ பெரு மக்கள் ஏற்றி வைத்த கல்வி விளக்கே தமிழகத்தைக் கல்வியிருந்த இருளை ஓரளவு விரட்டியது எனலாம்; அகவிருளகற்றி அறிவொளி வீசச் செய்த கிறிஸ்தவப் பெரியோரின் தமிழ்த் தொண்டைக் குறைத்துப் பேச முடியாது என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும் என்று திடமாக நம்புகின்றேன்.

தமிழ்த்தாய் எல்லா மக்களையும் ஒன்றுபடுத்துபவள். தமிழ்க் கோயிலில் வேற்றுமையில்லை. தமிழ்க்குலம் தவிர வேறொன்றும் இந்த மண்ணில் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே வள்ளுவ மறை.

இத்தகைய பொதுமையுணர்வின் அடிப்படையில் ‘மீரா அறநிறுவனம்’ சமண, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய இலக்கியச் செல்வங்களை அவற்றினால் தமிழுக்குக் கிடைத்த ஏற்றத்தை வளர்ச்சியை ஆராயும் முயற்சி போற்றத்தக்கதாகும்.