பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


இலக்கியங்களை ஆய்வுக்காக இவ்வாறு படித்துப் பார்க்கலாமே தவிர இப்படிப் பிரித்துப்பார்ப்பது என்பது எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ் இலக்கியமாகத்தான் பார்க்க வேண்டும் சமண இலக்கியம், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், பெளத்த இலக்கியம் என்று இருக்கிற இலக்கியத்தை இவ்வாறு பார்க்கலாகாது. இவையனைத்தும் தமிழ் இலக்கியம். இன்னும் கொஞ்சநாள் போனால், இது உலக இலக்கியம் என்று சொல்லவேண்டும். பற பற மேலே மேலே என்று பாரதி பாடினான்.

சமண இலக்கியங்களைப் பற்றி, எனக்கொரு பெரிய திருப்தி என்னவென்று சொன்னால் இஸ்லாமிய இலக்கியமும் செல்வாக்கோடு இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கமும் செல்வாக்கோடு இருக்கின்றது. கிறிஸ்துவமும் செல்வாக்குடன் உள்ளது கிறிஸ்துவ இலக்கியங்களும் செல்வாக்கோடு உள்ளன. பெளத்த இலக்கியங்களில் ஒன்று இரண்டைத் தவிர மற்றவை அவ்வளவு செல்வாக்குடன் இல்லை. சமணம் இன்றைக்குப் பெயரளவில் தான் இருக்கிறது. செல்வாக்கோடும் இல்லை. ஆனால் சமண இலக்கியங்கள், சமண இலக்கணங்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. இது தான் சமண இலக்கியத்தின் வெற்றி. அப்படிப்பட்ட சிறந்த சமண இலக்கியங்களப் பாராட்டுகிறோம்.