பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெளத்த இலக்கியம்
பேரா. வள்ளுவன் கிளாரன்ஸ்

பெளத்த இலக்கியப் பணியை இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். பெளத்த சமயத்தினர் தமிழ் எழுத்து வளர்ச்சிக்கு எவ்வாறு உதவினார்கள். அவர்கள் தமிழின் இலக்கிய வளர்ச்சிக்கு, இலக்கிய செல்வமாகிய மணிமேகலை வாயிலாக எவ்வாறு உதவினார்கள் என்று இரு பகுதிகளாக வகுத்திருக்கிறேன்.

தமிழ் எழுத்து வரலாறு, அதன் வளர்ச்சி ஒரு சிக்கலான ஆய்வுக்குரிய பொருளாகும். ஆயினும் பெளத்தர்கள் எவ்வாறு உதவினார்கள் என்ற கோணத்திலிருந்து பார்க்கும்போது, ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்க மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் கருத்துச் சுருக்கத்தை இப்பொழுது நான் கூற விரும்புகின்றேன் அசோகனுடைய கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவை என்று உங்களுக்குத் தெரியும். அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களில்கூட, பிராமிய எழுத்துக்கள் எழுதப்பெற்றிருந்தன. இந்த பிராமிய எழுத்துக்கள் அக்காலத்திலே நிலவிய எழுத்துக்களோடு, இணைந்து வட்ட எழுத்துக்களாகப் புது மலர்ச்சி பெற்றன. பிற்காலத்திலே பெளத்தர்கள் பிராகிருத மொழியின் வாயிலாக மதத்தைப் பரப்பினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அம்மொழியில் 'க'வில் நான்கு ஒலிகளையுடைய 'க' கரங்களும், ‘ட’வில் நான்கு ‘ட’ கரங்களும், 'ச'வில் இரு 'ச' கரங்களும் 'ஜ'வில் இரு 'ஜ' கரங்களும் இருந்தன. ஆகவே பிராகிருத மொழியின வாயிலாக வேதத்தை ஓதுவதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களையும் உருவாக்கினார்கள்.