பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

விழுந்ததும்.கார்மேகம் போன்ற சுருங்கூந்தல் விரிந்து விழுகின்றது. மின்னலொடு மேகமும் விழுவது போல் இருக்கின்றது. இவ்வாறு அழகுற பல உவமைகளை நாம் எடுத்துக்கூற முடியும். இவைகளை எல்லாம் நாம் பார்க்கும் போது, சாத்தனார் கூறுகின்ற கருத்துக்களை எல்லாம் நாம் பார்க்கும்போது, தமிழ் உணர்ச்சியோடு இலக்கிய மலர்ச்சியோடு, இலக்கிய நயத்தோடு, இவ்வளவு அழகான கருத்துக்களை, தமிழர் அறிந்து போற்றும் வகையிலே, ஓவியங்களாக வடித்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம், இந்த "மணிமேகலை" ஒன்றையே நாம் வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அங்கேயிருக்கின்ற கருத்துக்களை எல்லாம் சிந்தித்துப் பார்க்கப் பார்க்க சிந்திக்க அரிய கருத்துக்களாக இருக்கின்றன. அவை சிந்திப்பவர்க்குச் செந்தேன் முந்திப் பொழிவன: இன்பம் விளைப்பன.

நான்கு மதங்களையும் சேர்ந்தவர்கள், ஒன்றாகச் சேர்ந்து தமிழை வளர்த்தபோது தமிழகத்தில் இருந்தார்கள். இப்பொழுதும் தமிழகத்தில் இருக்கிறார்கள். சமயத்தால் வேறுபட்டிருப்பினும், மொழியால் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள், மொழியால் ஒன்றுபட்டிருப்பதன் காரணமாக, நாம் தமிழர் என்ற உணர்ச்சியோடு, ஒரே பண்பாடு உள்ளவர்கள் என்ற உணர்வோடு, ஒரே வரலாற்றைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு, ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு, ஒரே இலக்கியத்தையும் மொழிச் செல்வத்தையும் பகிர்ந்து கொள்ளுகிறவர்கள் என்ற உணர்வோடு நாம் ஒற்றுமையாக இருப்போம். அனைவரும் ஒன்று சேர்ந்து பாரதியார் சொன்ன கருத்தைச் சிந்தித்துப் பார்ப்போம்.

"ஊமையர்களாய், செவிடர்களாய், குருடர்களாய் வாழ்கின்றோம். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.