பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இஸ்லாமிய இலக்கியம்
சிலம்பொலி சு. செல்லப்பனார்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயங்கள் பேரிடம் வகிக்கின்றன. சமயம் சார்ந்து தமிழில் எண்ணிறந்த நூல்களும் பல்வேறு இலக்கிய வடிவங்களும் தோன்றியுள்ளன. சைவம், வைணவம் சார்ந்த இலக்கியங்கள் பல, இந்திய மண்ணில் தோன்றிய சமணமும் பெளத்தமும் தமிழுக்கு இலக்கியப் பொலிவைச் சேர்த்துள்ளது. பிற நாட்டிலிருந்து தமிழ் மண்ணுக்கு வந்த இஸ்லாமும், கிறித்துவமும் தமிழிலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தொண்டுகள் ஆற்றியுள்ளன. கிறித்துவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரிமார் தமிழ் கற்றுத் தமிழில் பல நூல்களைந் தந்துள்ளார், உரைநடை வளர்ச்சி, அகராதிக் கலை ஆகியவற்றுக்கு அவர்கள் வித்திட்டனர் எனலாம். அவர்கட்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்த தமிழ் இஸ்லாமியர் தமிழிலுள்ள எல்லா வகை இலக்கியங்களிலும் நூற்றுக்கணக்கான நூல்கள் யாத்துள்ளனர். எனினும் அவை வெளியுலகத்திற்கு உரியவாறு அறிவிக்கப்படவில்லை. அண்மைக் காலமாக கடந்த சில ஆண்டுகளாகத் தான் இஸ்லாமியக் காப்பியங்களையும் பிற இலக்கியங்களையும் மக்களிடையே எடுத்துரைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டுக்குச் சற்று முன்பும் பின்புமாக இஸ்லாமியக் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. அவை பண்டைய தமிழ் இலக்கியங்களையொப்ப வளமும் வனப்பும் பெற்றன. பாடு பொருளின் சிறப்பு காரணமாக அவ்விலக்கியங்கள் உயர்ந்தனவாக அமைந்துள்ளது.