பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

17ம் நூற்றாண்டில் தோன்றிய சீறாப்புராணம் ஒன்றை மட்டுமே மக்கள் அறிந்திருந்தனர். ஆயின் அண்மைக் கால முயற்சிகளில் பதினைத்துக்கு மேற்பட்ட அருங்காப்பியங்கள் மக்கட்கு அறிமுகம் ஆகியுள்ளன. காப்பிய உலகு பெருமை கொள்ளத்தக்க வகையில் பெருங்காப்பியங்கட் குரிய இலக்கண வரையறைகளைத் தம்மகத்தே கொண்டு இக்காப்பியங்கள் இலங்குகின்றன.

இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருப்பது சீறாப்புராணமே. பெருமானாரின் வாழ்க்கை வரலாறு கூறும் இக்காப்பியம் விவாதத்து, நுபுவத்து, ஹிஜ்றத்து என்னும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டு 5027 விருத்தப் பாக்களைக் கொண்டிருப்பது. சீறா காப்பிய மரபு வழுவாத மாகாவியமாகத் திகழ்கிறது. இஸ்லாமிய மார்க்க நெறிகளைப் படிப்போர் மனத்தில் பதியச் செய்கிறார் உமறுப்புலவர். ஒரே பாடலில் இஸ்லாமிய நெறிக்குரிய இலக்கணத்தை எடுத்துரைத்து விடுகிறார். 'இறைவன் ஒருவன்: முகம்மது அவனுடைய திருத்தூதர் என்னும் பொருளைத் தருவது கலிமா என்னும் இஸ்லாமிய மூல மந்திரச் சொல்; இவற்றை உறுதியாக நம்பி ஏற்பது ஈமான் எனும் நம்பிக்கை, நம்பி ஏற்றதை நடைமுறைப்படுத்துவது ‘அமல்’ எனப்படும். இந்நற்செயல்களில் தவறாமல் ஈடுபட்டு வருவது இஸ்லாமிய நெறியில் சேர்தல் ஆகும்.

ஒருத்தன் நாயகன்; அவற் குரிய தூதெனும்
அருத்தமே உரைகலிமா; அந் நிண்ணயப்
பொருத்தம் ஈமான் நடை புனதைலாம் அமல்
திருத்தமே இவை-இஸ்லாமிற் சேர்தலே!

இஸ்லாமிய நெறியின் அடிப்படைத் தத்துவங்களை முழுமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்ற உமறுவின் இப்பாடலைச் சீறாப் புராணத்தின் முடிமணி எனலாம்.