பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஆக்கம் நீங்கினும் அகவின்பம் நீங்கினும் ஆக்கம்
ஊக்கம் நீங்கினும் உறுமுறை நீங்கினும் உயிரின்
வீக்கம் நீங்கினும் நீங்கும் நண்புடன் வியந்தளித்த
தேக்கம் நீங்கிலாது எந்தைசொல் போற்றுதல் சிறப்பே"

எனத் திருமணி மாலை செய்யுள் கூறுகிறது.

சேகனாப் புலவரின் மற்றொரு காவியம் குத்புநாயகம் முகியித்தீன் ஆண்டகை அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் மீது பாடப்பட்டது. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்திற்குப்பின் தீனுல் இஸ்லாம் மார்க்கத்தைப் பேரபாயங்களிலிருந்து காத்துப் புத்துயிரூட்டியவர் அப்துல் காதிர் ஜிலானி ஆவார். இவர் பாரசீக நாட்டு ஜீலான் நகருக்கு அண்மையில் பிறந்தவர். கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் தம் 18ஆவது வயதில் கல்வி கற்கப் பாக்தாத் நகருக்குப் புறப்பட்டார். அவருடைய தாயார் நாற்பது பொற்காசுகளை அவருடைய சட்டையின் உட்புறம் வைத்துத் தைத்து வழியனுப்புகையில் "எக்காலத்தும் எந்நிலையிலும் எக்காரணம் கொணடும் பொய் பேசக்கூடாது" எனச் சொல்லியனுப்பினார். வழியில் கள்வர்கள் அவரைப் பிடித்தனர். சட்டையின் மேல் புறமிருந்த பையில் ஒன்றும் இல்லாததால் "உன்னிடம் எதுவும் இல்லையா?" என்று கேட்டபோது, தாம் சொற்படி உண்மையே பேச வேண்டுமென்பதால் திருடர்கள் கவர்ந்து கொள்வரே என்ற எண்ணமின்றி, தன் சட்டையின் உட்புறம் 40 பொற்காசுகள் தைக்கப்பட்டிருப்பதைக் கூறினார். அவரது நேர்மையைக் கண்ட கொள்ளைக் கூட்டத்தினர் திருந்தி நல்வழிப்பட்டனர் என்பது வரலாறு.

எத்தலத் தாயினும் எவர்கள் பாலினும்
எத்தொழி லிடத்தினும் எனனவந் தெய்தினும்
உய்த்திட துண்மை யாலுரைத்தியென்றருள்
பொய்த்திடாத் தாயார் சொலறுதி பூண்டதே