பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஆசிரியர் கொங்குவேள் மதம் பிடித்த யானை உதயணன் யாழுக்குப் பணிந்து தணிந்து நின்றதை,

ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும்
மாணி போல மதகளிறு படிய

என்பார்.

வண்ணக் களஞ்சியப் புலவர் இராஜ நாயகம் எனும் காவியத்தைப் படைத்துள்ளார். இது சுலைமான் நபியின் வரலாறு கூறுகிறது. வளம்மிக்க பாக்களைக் கொண்டது. வண்ணக் களஞ்சியப் புலவர் நாட்டு வளப்பம் பாடுவது நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாய் உள்ளது. ஷாம் நாட்டில்,

தானமேற்பவர்கள் இலையெனச் சலிக்கும்
சலிப்பின்றி மறுசலிப் பிலையே!
மாணவேல் விழியார் மருங்குநூ லென வாங்
குறைவின்றி மறுகுறை விலையே!
ஆனதாங் கொடைமங் கலவெற்றிக் கொடியர்
அன்றியே கொடியர்வே றிலையே!
ஈனவெம் பவநிந்தனை யின்றி இகழ்வாய்
இயற்றுநிந் தனைபிறி திலையே.

இப்புலவர் தீன் விளக்கம் எனும் மற்றொரு காப்பியத்தையும் எழுதியுள்ளார் தீன் நெறியாகிய இஸ்லாம் தமிழகத்தில் விளங்கத் தொடங்கிய நிலையை உணர்த்தும் விளக்கக் காவியமே இது!

குலாம் காதிறு நாவலர் நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் என்னும் இரு அருமையான காப்பியங்களைப் பாடியுள்ளார்.