பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII


‘சூஃபி’ தத்துவ அடிப்படையில் நூற்றுக்கணக்கான மெய்ஞ்ஞான நூல்கள் தமிழில் எழுந்தன. தக்கலை மெய்ஞ்ஞானி பீர் முகம்மது அப்பா மட்டும் பத்தாயிரம் மெய்ஞ்ஞானத் தமிழ்ப் பாடல்களை எழுதிக் குவித்து மெய்ஞ்ஞானச் சிந்தனையை வளப்படுத்தியுள்ளார் தொல்காப்பியம் தொட்டு வழக்கில் இருந்து வந்த எல்லா வடிவங்களிலும் இலக்கியம் படைத்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள். தமிழில் அறவே இல்லாத புதுவித இலக்கிய வடிவங்களிலும் தமிழ் இலக்கியம் படைத்து வளமூட்டினர். பாரசீக மொழி இலக்கிய வடிவமான நாமா, அரபி மொழி இலக்கிய வடிவங்களான கிஸ்ஸா, மஸ்அலா முனாஜாத்து ஆகியவற்றை தமிழ் இலக்கிய வடிவங்களாக, தமிழ் இலக்கண விதிமுறைகளுக்குட்பட்டு உருவாக்கிப் பெருமை சேர்த்தனர். தமிழுக்கென்றே புத்தம் புதிய இலக்கிய வடிவங்களாக படைப்போர், நொண்டி நாடகம், திருமண வாழ்த்து, அரபுத் தமிழ் ஆகிய புத்தியல் துறைகளில் இலக்கியம் படைத்துத் தமிழைச் செழுமைப்படுத்தினர்.

காலத்தால் பிந்திவந்த கிறிஸ்தவ சமயம் சார்ந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், மேனாட்டுப் போக்கிலான தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலினர். அதுவரை வடமொழி முதலான வேற்று மொழிகளிலிருந்து இலக்கியங்கள் படைக்கப்பட்டதற்கு மாறாக, திருவாசகம் போன்ற இலக்கியங்கள் ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேபோன்று மொழியியல் துறை, நவீனப் போக்கில் கால்டுவெல் போன்றவர்களால் ஆராயப்பட்டது. தமிழ் மொழியின் தனிச் சிறப்புகள் ஒப்பீட்டாய்வு அடிப்படையில் எண்பிக்கப்பட்டன. வீரமாமுனிவரால் சதுரகராதி உருவானதின் காரணமாக 'அகராதிக் கலை' காலத்திற்கேற்ற வடிவில் உருப்பெறத் தொடங்கின. எழுத்துச் சீர்திருத்த உணர்வு செயல் வடிவு பெற்று, எழுத்து மாற்றத்திற்கு வழி வகுத்தன.